*கோப்புகளால் ஒரு கொலை*
அரசுப் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்து கொண்டிருந்தது. முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரியான வேதாச்சலம் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு வழக்கை மாதிரியாகக் கொண்டு வகுப்பெடுக்க ஆரம்பித்தார்.
உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு வந்தது. வழக்கின் சிக்கல் இது தான்.
ஒருவர் ஓய்வுபெற்ற பின் முழு ஓய்வூதியதையும் பெறவேண்டுமானால் குறைந்த பட்சம் முப்பது ஆண்டுகளாவது பணியாற்றி இருக்க வேண்டும். அதற்கு கீழே பணியாற்றி இருந்தால் அதற்குத் தகுந்தபடி ஓய்வூதியம் குறைக்கப் படும். ஆனால் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாவது பணியாற்றி இருக்கவேண்டும். இல்லை என்றால் ஒரு ரூபாய் கூட வாங்க இயலாது.
ஒருவர் பத்தரை ஆண்டுகள் பணியாற்றி விட்டு ஓய்வுபெறுகிறார். அதன்பின் அவரது பணிக்காலத்தை கணக்கிட்டு ஓய்வூதியம் கணக்கிட்டு வழங்கவேண்டும்.
அந்தக் கோப்பைக் கையாண்ட கிளார்க் கோபாலன் எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். கொடுத்த வேலையை கருமமே கண்ணாகக் கொண்டுசெய்து முடிப்பவர். ஓய்வுபெற்றவரின் பணிப் பதிவேட்டை எடுத்து ஆராயும் போது ஓய்வுபெற்றவர் பல முறை தனக்கு அனுமதிக்கப் பட்ட அளவை விட அதிக நாட்கள் விடுமுறை எடுத்திருந்தது தெரிய வருகிறது. பொறுமையாக அதனைக் கணக்கிடத் தொடங்குகிறார். ஓய்வுபெற்றவர் ஒன்பது ஆண்டுகளும் பத்து மாதங்களும் மட்டுமே பணியாற்றி இருக்கிறார். எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் பத்து ஆண்டுகள் வரவிலை. உடனே தனது பிரிவின் கண்காணிப்பாளரிடம் எடுத்துச்சென்று கலந்துரையாடுகிறார். அவரும் ஒருமுறை கணக்கிட்டுப் பார்க்கிறார். ஒன்பது ஆண்டுகள் பத்து மாதங்கள் மட்டுமே வருகிறது. எனவே கோப்பை உரிய உயரதிகாரிகளின் ஒப்புதலுக்கு அனுப்பி ஒப்புதல் பெறுகின்றனர். கருவூலத் துறைக்கெல்லாம் சென்று வந்த பின் ஓய்வூதியம் வழங்க இயலாது என்று ஆணையிடப் படுகிறது.
ஓய்வுபெற்றவர் அந்த ஆணையைப் பெற்றவுடன் அதிர்ச்சியடைகிறார். இதன் சிக்கல்கள் புரியாத அவரது நண்பர்களில் சிலர் அவரிடம் நீங்கள் நீதிமன்றத்தில் வழக்குப் போடுங்கள் என்று ஆலோசனை கூறுகின்றனர்.நேராகப் போய் ஒரு வழக்கறிஞரைப் பார்க்கிறார். "ஆகா! ஒருகேஸ் கிடைச்சிருச்சே " என நினைத்த வழக்கறிஞர் "கவலையே படாதீங்க சார். ஒரு தடவை கேஸை நடத்தி ஜெயிச்சிட்டோம்னா நீங்க சாகுற வரைக்கும் பென்சன் வாங்கலாம்" என்று உற்சாகப்படுத்தி விட்டு வழக்குப் போட வைக்கிறார். சம்பந்தப்பட்ட துறையின் ஆணையாளரை முதல் பிரதிவாதியாகவும், இணை ஆணையரை இரண்டாம் பிரதிவாதியாகவும், உதவி ஆணையரை மூன்றாம் பிரதிவாதியாகவும், பிரிவின் கண்காணிப்பாளரை நான்காம் பிரதிவாதியாகவும் வைத்து வழக்குத் தொடரப் படுகிறது. வழக்கு சில நாட்களில் நீதிபதியின் முன் விசாரணைக்கு வருகிறது. அதனைப் படித்துப் பார்த்த நீதிபதி எடுத்தவுடன் எல்லாவறுக்கும் நேரடியாக வழக்குப் போடத் தேவையில்லை. முதலில் நிர்வாக ரீதியாக சரிசெய்ய முயலுமா? என்று பாருங்கள் என்று கூறி விட்டு இன்னும் எட்டு வாரங்களுக்குள் வாதியின் பணிப்பதிவேடுகளை ஆய்வு செய்து நீதிமன்றத்தின் முன் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறார்.
நீதிமன்ற உத்தரவு ஆணையாளர், இணை ஆணையாளர் என ஒவ்வொரு பிரதிவாதியின் கைகளுக்கு வருகிறது. வழக்கம் போல் ஒவ்வொருவரும் மிக அவசரம் என்று குறிப்பிட்டு கண்காணிப்பாளருக்கு அனுப்புகின்றனர். இறுதியாக நீதிமன்ற உத்தரவு கிளார்க் கோபாலன் கரங்களுக்கு வந்து சேர்கிறது.
அவர் உடனே பரபரப்பாக வாதியின் பணிப் பதிவேடுகளை எடுத்து ஆராய்கிறார். எத்தனை முறை திரும்பத் திரும்பப் பார்த்தும் முதலில் செய்த கணக்கீட்டில் எவ்விதத் தவறும் இல்லை. ஏற்கனவே எடுக்கப் பட்ட முடிவு சரியானது என்றே காட்டியது. பணிப்பதிவேடு மற்றும் கோப்புகளுன் சென்று கண்காணிப்பாளரிடம் செல்கிறார். இருவரும் சேர்ந்து மீண்டும் ஆராய்ந்து பார்க்கின்றனர். சரியாகவே இருந்தது. கோப்பில் தெளிவாக விவரங்களைப் பதிவுசெய்து உதவி ஆணையாளருக்கு சமர்ப்பிக்கின்றனர். அவர் எதற்கும் ஒரு முறை கருவூலத் துறையின் கருத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறார். ஓரிரு நாட்களில் முறைப்படி கருவூலத் துறையின் கருத்துரைக்காக அனுப்பப் படுகிறது. அங்கும் அந்தக் கோப்பு ஆராயப்பட்டு சில நாட்களில் பழைய முடிவு சரியானதே என்ற கருத்துடன் பதில் வருகிறது.
நீதிமன்றத்திற்குப் பதில் அளிக்கக் கூடிய வகையில் விரிவான அறிக்கையை கிளார்க்கும் கண்காணிப்பாளரும் இணைந்து தயார் செய்கின்றனர். உதவி ஆணையரின் ஒப்புதல் பெற்ற பின் அவ்வறிக்கை இணை ஆணையாளர் அலுவலகத்திற்கு அனுப்பப் படுகிறது. அவரது மேஜையில் குவிந்து கிடந்த கோப்புகளில் ஒன்றாக இந்தக் கோப்பும் சென்று சேர்கிறது.
ஊழோ.விதியோ, யாருடைய கெட்ட நேரமோ தெரிய வில்லை. அன்று மாலை மேசையின் விளிம்பில் இருந்த அந்தக் கோப்பு சரிந்து விழுகிறது. அறையைப் பூட்ட வந்த அலுவலக உதவியாளர் கீழே கிடந்த கோப்பை எடுத்து அந்த அறையின் ஒரு மூலையில் இருந்த பயன்படுத்தாமல் வைக்கப் பட்டிருந்த ஒரு சில பழைய கோப்புகளின் மேல் அடுக்கி வைத்து விட்டுச் சென்று விடுகிறார். மேசையின் மேல் பல்வேறு கோப்புகள் வருவதும் ஒப்புதல் பெற்றுச் செல்வதுமாக இருந்தன.
அடுத்தடுத்த நாட்களில் இணை ஆணையாளரும் பல்வேறு அவசரப் பணிகளில் மூழ்கி விடுகிறார். சில நாட்கள் காத்திருந்து பார்த்த கோபாலன் இணை ஆணையாளர் அலுவலகத்தைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இணை ஆணையரின் நேர்முக உதவியாளரிடம் நினைவு படுத்துகிறார். சில நாட்கள் காத்திருந்து பார்த்து விட்டு நேராகவே இணை ஆணையாளர் அலுவலகத்திற்குச் சென்று, இணை ஆணையாளரின் நேர்முக உதவியாளரிடம் கூறி நினைவுபடுத்துகிறார். “சார் கையெழுத்துப் போட்டதுதும் உங்களுக்கு உடனே கூறுகிறேன்” என்று கூறுகின்றனர். ஆனாலும் கையெழுத்தாகி வந்து சேரவில்லை. மேலும்,சில நாட்கள் காத்திருந்து பார்த்து விட்டு நேராகவே இணை ஆணையாளர் அலுவலகத்திற்குச் செல்கிறார். இணை ஆணையரின் அலுவலகத்தில் நினைவு படுத்துகிறார். அதன்பின் அங்கு கோப்பினைத் தேடித் தேடிப் பார்க்கின்றனர். அந்த அலுவலகத்தின் பெரும்பாலான மேசைகளில், பீரோக்களில் தேடியும் அது கிடைக்கவில்லை. பின்னர் ஒரு நாள் எதேச்சையாக தேவையற்ற பழைய கோப்புகளை அழிக்க முனையும்போது அந்தக் கோப்பு கண்களில் தட்டுப் படுகிறது.
ஆனால் அதற்குள் காலம் கடந்து விடுகிறது. வழக்குத் தொடர்ந்தவர் இதையெல்லாம் அறியாததால் நீதிமன்றம் விதித்த எட்டு வாரக் காலக்கெடு முடிகின்ற நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் “நீதிமன்ற அவமதிப்பு" செய்து விட்டதாக நீதிமன்றத்திற்குச் செல்கிறார்.
நீதிமன்றம் உடனடியாகத் தீர்ப்பளிக்கிறது. பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக ஓய்வூதியத்தை வழங்குமாறும், நீதிமன்ற அவமதிப்பிற்குக் காரணமான அரசாங்க அலுவலர்கள் மேல் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஆணையிடுகிறது.
துறையின் தலைமை இடத்தில் இருந்த ஆணையாளர் கடும் கோபமடைகிறார். உடனடியாக இணை ஆணையாளரை அழைத்து "கோர்ட் கேஸக் கூட டிலே பண்ணுவீங்களா?. உடனே டிலே பண்ணுனவங்களுக்கு சஸ்பென்ஷன் ஆர்டர் இஸ்யு பண்ணி கோர்ட்ல சப்மிட் பண்ணுங்க" என்று கட்டளையிடுகிறார்.
ஆணையாளருக்கு முன்பு எதுவுமே பேசாமல் இருந்த இணை ஆணையாளர் தனது அலுவலகத்திற்கு வந்தவுடன் உடனடியாக ஒரு கூட்டத்தைக் கூட்டுகிறார். சம்பந்தப் பட்ட கண்காணிப்பாளர், உதவி ஆணையர், கருவூல அதிகாரி அனைவரும் அழைக்கப்படுகின்றனர். கருவூல அதிகாரி உடனடியாகப் பதில் கூறி விடுகிறார். "சார்! எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. அந்த கேஸ் சம்பந்தமா ஆலோசனை மட்டும் கேட்டாங்க. அதை நாங்க மூணு நாளிலே கொடுத்துட்டோம்"
உதவி ஆணையாளரும் கண்காணிப்பாளரும் தாங்களும் இரண்டு வாரங்களுக்குள் வேலையை முடித்து அனுப்பி விட்டதாகக் கூறுகின்றனர். தான் தப்பித்தால் போதும் என்ற பயம் ஒவ்வொருவருடைய முகத்திலும் அப்பட்டமாகத் தெரிந்தது.
இணை ஆணையாளர் கோபமாகப் பேச ஆரம்பித்தார். "பைலை அனுப்புனா போதும் உங்க வேலை முடிஞ்சிருச்சு அவ்வளவு தானே? எனக்கு தினமும் நூற்றுக்கணக்கான பைல் வருது. ஒவ்வொண்ணையும் எது எவ்வளவு அவசரம்னு பார்த்துக்கிட்டு இருக்க முடியுமா? நீங்க ஃபாலோபண்ணியிருக்கணுமா? இல்லையா? "
கண்காணிப்பாளர் "சார்! எங்க கிளார்க் வந்து பார்த்துட்டு தான் இருந்தார்".
இணை ஆணையாளர் மீண்டும் கோபமாகப் பேசினார்." இவ்வளவு முக்கியமான விஷயத்திற்கு கிளார்க் ஃபாலோ பண்ணுனா போதுமா? நீங்க எதுக்கு சூப்பரிண்டெண்ட், அசிஸ்டண்ட் கமிஷனர்னு இருக்கீங்க? "
கண்காணிப்பாளர் தலைகுனிந்து கொண்டே கூறினார். " சார்! தப்பு தான் சார். ஆனா அடுத்த மாசம் எனக்கு ரிட்டையர்மெண்ட் சார். இப்போ என்மேல ஏதாவது ஆக்சன் எடுத்தா என்னால ரிட்டையர்மெண்ட் ஆக முடியாது சார். ரிட்டையர்மெண்ட் பெனிபிட், பென்சன் எதுவுமே இல்லாம நடுத்தெருவுக்கு வந்துடுவேன் சார்" என்றார்.
இணை ஆணையருக்கும் அப்போது தான் தனக்கு விரைவில் வர இருக்கும் பதவி உயர்வு பற்றி நினைவு வந்தது. அமைதியாக உதவி ஆணையரைப் பார்த்துக் கூறினார். " பியூன் பைலை மூலையில போட்டுட்டார்னு கோர்ட்ல சொன்னா ஜட்ஜ் கேவலமாத் திட்டுவாரே " என்றார்.
மறுநாள் அவர் அந்தக் கோப்பை கையாண்ட கிளார்க் கோபாலனை அழைத்தார் .நிதானமாகப் பேசத் துவங்கினார்."இதோ பாருங்க எல்லோர் மேலயும் தப்பிருக்கு. நான் உள்பட. அசிஸ்டன்ட் கமிஷனர் மேல எல்லாம் ஆக்ஷன் எடுத்தா, கமிஷனர் லெவல்ல, தலைமைச் செயலக லெவல்ல தான் சரி செய்ய முடியும். இப்போதைக்கு உங்களுக்கு மட்டும் சஸ்பென்சன் ஆர்டர் தற்காலிகமா தர்றேன். அதைக் கோர்ட்ல ஃபைல்பண்ணி கேஸ் டிஸ்மிஸ் ஆனவுடன் உங்க மேல எந்த பாதிப்பும் வராதபடி துறை ரீதியான நடவடிக்கையில் நீங்க குற்றமற்றவர்னு நானே ஆர்டர் போட்டுத் தர்றேன், கவலைப்படாம தைரியமா போங்க " என்கிறார் .
அதனை கோபாலனால் மனதளவில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவருடைய அறிவுக்கு எட்டியவரை வேறு சிறந்தவழிகள் எதையும் கூற இயலவில்லை. உயரதிகாரிக்கு முன்னால் எதுவும் எதிர்த்துப் பேசவும் இயலவில்லை. கனத்த இதயத்துடன் "சரிங்க சார் " என்று கூறி விட்டு வெளியேறுகிறார்.
கோபாலன் கலங்கிய கண்களுடன் தனது அலுவலகத்திற்குச் சென்றார். அவரைப் பார்த்தவுடன் கண்காணிப்பாளர் பரபரப்பாக அவரிடம் ஓடி வந்து என்ன நடந்தது என்று கேட்கிறார். கண்களில் கண்ணீரோடு கையறு நிலையில் தட்டுத் தடுமாறி கோபாலன் நடந்ததைக் கூற ஆரம்பித்தார். சொல்ல ஆரம்பித்ததிலிருந்து கண்காணிப்பாளர் படபடக்கும் இதயத்தோடு கேட்டுக் கொண்டிருந்தார். சொல்லி முடித்தவுடன் கோபாலன் அவருக்குள் எழுந்த கோபத்தையும், ஆற்றாமையையும் கட்டுப்படுத்திக் கொண்டு தலைகுனிந்து அமர்ந்து கொண்டார். கண்காணிப்பாளருக்கு உள்ளூர ஒரு நிம்மதி. இருந்தாலும் முகத்தைப் பரிதாபமாக வைத்துக் கொண்டு ஆறுதல் கூறுகிறார். உண்மையிலேயே கோபாலன் மேல் பரிதாபமும் கொண்டார். "கவலைப் படாதப்பா!, நாங்க எல்லாம் இருக்கிறோம்ல , அவ்வளவு சீக்கிரம் உன்னைக் கை விட்டுடுவோமா என்ன? தைரியமா இரு, கொஞ்ச நாள் தான்" என்று ஆறுதல் கூறுகிறார்.
அந்த ஆறுதல் வார்த்தைகளையெல்லாம் கோபாலனுக்குள் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவை வெறுமனே ஆறுதலுக்காகச் சொல்லப்படுகின்ற வார்த்தைகள் மட்டுமே என்று கோபாலனுக்குத் தோன்றியது. நிமிர்ந்து கண்காணிப்பாளரின் முகத்தை ஒரு நிமிடம் பார்த்தார். எதுவும் பேசவில்லை.
சில நிமிடங்களில் நடந்தவை எல்லாம் அந்த அலுவலகம் முழுவது பரவியது. சிலர் நம்பிக்கையுடன் பேசினர். சிலர் ஆறுதலாகப் பேசினர். சிலர் கோபத்துடன் யார் யாரையோ திட்டினர். ஆனால் இவை எதையுமே கேட்கும் மனநிலையில் கோபாலன் இல்லை. யார் முகத்தையும் பார்க்கவும் விரும்பவில்லை. அமைதியாக வீட்டிற்குக் கிளம்பிச் சென்றார்.
ஓரிரு நாட்களில் பணியிடை நீக்க ஆணை வருகிறது. துறை ரீதியான விசாரணை துவங்கப் படுகிறது.
நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது என்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. ஆனால் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்காகக் காலதாமதமாகிறது.
ஆனால் கோபாலன் நடந்த எதையுமே தனது வீட்டில் சொல்லவில்லை. அது தனக்கு அவமானம் என்று நினைத்திருக்கலாம். தனது வீட்டிலிருப்பவர்களுக்கு வேதனையைத் தரும் என்று நினைத்திருக்கலாம். குழந்தைகளின் கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என்று நினைத்திருக்கலாம். எதுவாயிருந்தால் என்ன? அவரின் ஒற்றை இதயம் மட்டும் அத்தனை அழுத்தங்களையும் சுமந்து கொண்டு துடித்துக் கொண்டிருந்தது.
தினமும் வழக்கம் போலவே அலுவலகம் செல்வதாகக் கூறிவிட்டுக் கிளம்பி சென்றார். ஏழெட்டு கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஒரு பூங்காவிற்குச் சென்று அமர்ந்து கொண்டார். மாநகரம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த காலத்திலும் பூங்காவிற்குள் பல மனிதர்கள் வேறொரு உலகத்தில் இருந்தனர். வேலை வெட்டிக்குப் போகாமல் அங்கிருந்த நீண்ட இருக்கைகளில் படுத்துக் கொண்டு சிலர் இருந்தனர். ஏகாந்த நிலையில் எதற்கும் கவலைப்படாத முகங்களைக் கொண்டிருந்தனர். விற்பனைப் பிரதிநிதிகள் சிலர் வெய்யில் நேரம் என்பதால் அங்கு மர நிழலில் இளைப்பாறிக்கொண்டிருந்தனர். விற்பனை இலக்குகளை எப்படி அடைவது என்ற உரையாடல் அவர்களுக்குள் நிகழ்ந்து கொண்டிருந்தது. சில இளைஞர்கள் அங்கு போட்டித் தேர்வுகளுக்காக சேர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். கனவுகளைத் துரத்திக் கொண்டு ஓடிக்கொண்டிருந்ததை அவர்களின் முகங்கள் பிரதிபலித்தன. சில பெண்மணிகள் தங்களது கணவன்மார்களை அலுவலகத்திற்கும், பிள்ளைகளைப் பள்ளிக்கும் அனுப்பி விட்டு, வீட்டு வேலைகளையெல்லாம் முடித்து விட்டுப் பொறுமையாக அங்கு வந்து நடைபயணம் செய்து கொண்டிருந்தனர். தங்களுக்குள் தோழிகளைப் போலப் பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தனர்.
அங்கிருந்த அனைவருக்கும் அந்தப் பூங்கா ஏதோ ஒருவகையில் ஆறுதலைத் தந்து கொண்டிருந்தது. கோபாலன் ஒருவரைத் தவிர. பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்ற மரங்கள், செடிகொடிகள், வண்ணத்துப் பூச்சிகள், சின்னஞ்சிறிய உயிரினங்கள், பறவைகள், மனிதர்கள் எனப் பல்வேறு ஜீவராசிகள் சூழ்ந்திருந்த இடத்தில் அவர் அவருடைய உலகில் யாருமற்ற தனிமையில் இருந்தார். சாலையில் செல்பவர்களில் தெரிந்தவர்கள் யாரேனும் இருந்து தன்னைப் பார்த்து விட்டால் என்ன செய்வது என்று எண்ணிப் பயந்த அவர் பூங்காவின் ஒரு மூலையில் புதர் போல இருந்த ஒரு இடத்தில் சென்று அமர்ந்து கொண்டார்.
வீட்டில் அவரது முகத்தில் இருந்த கவலையைப் பார்த்த அவரது மனைவி என்னவென்று கேட்க அலுவலகத்தில் வேலைப்பளு, சீனியாரிட்டி பிரச்சினை என்று ஏதேதோ பொய்களாகச் சொல்லி சமாளிக்கிறார். "ஆபீஸ் பிரச்சினையை ஆபீஸ்லயே விட்டுடுங்க, வீட்டுக்கு கொண்டு வராதீங்க" என்று அவரது மனைவி அறிவுரை கூறி விட்டு முடித்துக் கொள்கிறார்.
நாட்கள் மெதுவாகச் செல்லுகின்றன. அவரது அன்றாட வாழ்க்கை பூங்காவிலேயே தனிமையில் கழிகிறது. சம்பள பிரச்சினைகளும் வருகின்றன பணியிடை நீக்கத்தால் அவருக்குப் பாதி சம்பளம் மட்டுமே கிடைத்தது. மீதியைக் கடன் வாங்கி சமாளிக்கிறார்.
அவர் நான்கு நாட்களுக்கு ஒருமுறை விடாமல் நீதிமன்றத்திற்குச் சென்று வருகிறார்.வழக்கு முடிந்து விட்டால் அதன் பின் துறைரீதியான விசாரணையில் குற்றமற்றவர் என்று வெளிவந்து விடலாம். ஆனால் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருந்த அந்த நீதிமன்றத்தில் பெரிய பெரிய வழக்குகளும், அவசர வழக்குகளுமே அன்றாட விசாரணைக்கு வந்து கொண்டிருந்தன. அந்த வழக்கு மட்டும் வரவேயில்லை.
ஒரு வழியாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு வழக்கு விசாரணைக்கு வந்து வழக்கு முற்றுப்பெறுகிறது. வழக்குத் தொடர்ந்தவர் ஒய்வூதியத்தைப் பெற்றுக்கொண்டு மகிழ்சசியுடன் சென்று விட்டார். கோபாலன் உடனடியாக இணை ஆணையாளர் அலுவலகத்திற்கு ஓடுகிறார்.
அங்கு அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அவரது கொஞ்ச நஞ்ச நம்பிக்கைகளும் சரிந்து விழுந்து உடைந்து நொறுங்கின. அது வரை இருந்த இணை ஆணையாளர் பதவி உயர்வோடு பணியிட மாறுதலும் பெற்று வெளியூருக்குச் சென்று விட்டார். கடுமைக்கும் கண்டிப்புக்கும் பெயர் போன ஒருவர் அங்கு புதிதாக இணை ஆணையாளராகப் பொறுப்பேற்றிருந்தார்.
கோபாலனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அனைத்து வழிகளும் மொத்தமாக அடைபட்டு விட்டது போலத் தோன்றின. கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. அதிக மன அழுத்தத்தால் மாரடைப்பு வந்தது. நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவர் அதன் பின் எழுந்திருக்கவே இல்லை.
வீட்டிற்குத் தகவல் சொல்லப்படுகிறது. அத்தனை நிகழ்வுகளும் அதற்குப் பிறகு தான் அவரது மனைவிக்குத் தெரிய வருகிறது கோபாலனுடைய மனைவி மார்பிலறைந்து கொண்டு அழுதார். அழுகையோடு வார்த்தைகள் நெஞ்சைப் பிளந்து கொண்டு வந்தன.
“அடப்பாவி மனுசா !! ஒரு பேச்சு என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல. சஸ்பென்சன் என்ன, வேலையே போயிருந்தாக்கூட நாம வாழ்ந்திருக்க முடியாதா? இப்படி எல்லாத்தையும் மனசுக்குள்ளேயே போட்டு வச்சு மொத்தமாப் போய்ச் சேர்ந்துட்டயே” .
வகுப்பை எடுத்துக் கொண்டிருந்தவர் முழுக்கதையையும் சொல்லி முடித்தார். முடித்து விட்டு அந்த வகுப்பறையிலிருந்த அனைவருடைய முகங்களையும் பார்த்து விட்டு நிதானமாக ஒரு கேள்வி கேட்டார்.
" கோபாலனின் அகால மரணத்திற்கு யார் காரணம்?"
கேள்வியைக் கேட்டு முடிப்பதற்குள் அங்கிருந்தவர்களுள் சரவணன் என்ற ஒருவர் எழுந்து நின்று பேச ஆரம்பித்தார். "சார் அந்த அளவுக்குப் போகாமலேயே சரி பண்ணியிருக்கலாமே.சட்ட ரீதியாகவே வழி இருக்கே! " என்று பேச ஆரம்பித்தார்.
வேதாச்சலம் உடனடியாக அவரை அமர வைத்து விட்டு "என்ன பண்ணியிருக்கலாம்னு எல்லாம் நான் கேட்கல, நடந்து முடிஞ்சிடுச்சு. ஒருத்தன் செத்துட்டான்.அவனோட சாவுக்கு யார் காரணம்? கொன்றது யார்? . அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க" .
இரண்டு நிமிடங்கள் அமைதி நிலவியது. முதலாவதாக ஒருவர் கூறத் துவங்கினார்.
"சார் மத்த எல்லோரையும் விட கோபாலன் தான் முதல் காரணம். அவர் போன்ல பேசுனதுக்குப் பதிலா, நேர்ல போனதுக்குப் பதிலா எழுத்துப் பூர்வமா வாரம் ஒரு தடவை நினைவூட்டுக் கடிதம் அனுப்பியிருக்கலாம். அவர் வேலையை சரியாகச் செஞ்சார்னு பதிவு ஆகியிருக்கும்ல. இப்படி சிக்கியிருக்க மாட்டார்ல?"
பலருக்கு அந்த பதில் திருப்தியானது போல் தெரியவில்லை.
இன்னொருவர் எழுந்து "சார்! செக்சன்ல நடக்குற எல்லாத்துக்கும் சூப்பரின்டென்ட் தான் பொறுப்பு. அவர் தான் கவனிச்சிருக்கணும். சுதாரிச்சு அவரே சரி பண்ணியிருக்கணும். நேரடியா இணை ஆணையாளர் அலுவலகத்துடன் பேசி ஆரம்பத்திலேயே முடிச்சிருக்கணும்"
மூன்றாமவர் அதையே வழிமொழிந்தார். "ஆமா, சார்! கண்காணிப்பாளரும், துணை ஆணையரும் தான் முதன்மையான காரணம். எல்லாத்தையும் கிளார்க்கே செய்யுறார்னா, அவுங்க ரெண்டு பேரும் எதுக்கு?. முக்கியமான பைல்களையாவது ஃபாலோ பண்ண வேண்டாமா?. அது மட்டுமில்லாமா பிரச்சினைன்னு வந்தப்போ கோபாலனை காப்பாத்த முயற்சி பண்ணனுமா? வேண்டாமா?. தான் தப்பிச்சா போதும். "
எங்கிருந்தோ அதற்கு மறுமொழியும் வந்தது. "துறை நடவடிக்கையின் போது காப்பாத்திக்கலாம்னு நெனைச்சிருப்பாங்க, அவங்களுக்கு எப்படி சார் தெரியும், இப்படி நடக்கும்னு"
நான்காவதாக ஒருவர் எழுந்து "இணை ஆணையாளர் தான் சார் எல்லாத்துக்கும் காரணம். கோபாலனுக்கு சஸ்பென்ஷன் ஆர்டர் கொடுக்கலாம்னு முடிவெடுத்தது அவர்.அந்த முடிவுல வேற யாருக்கும் பங்கில்லை. எனவே இணை ஆணையாளர் தான் முதன்மைக் குற்றவாளி " என்றார்.
ஐந்தாவதாக ஒருவர் அதனை மறுத்து வாதிட்டார் " அது எப்படீங்க ஒட்டு மொத்தப் பழியையும் அவர் ஒருத்தர் மேலயே போடுவீங்க. என்னைக் கேட்டா இவுங்க யாருமே இல்லை, ஆணையாளர் தான் காரணம். அவர் தான் அந்தத் துறையின் தலைமை இடத்துல இருக்கிறார். அவருக்கு கீழ நடக்குற எல்லாத்துக்கும் அவர் தான் பொறுப்பு. கோர்ட்லயே அந்த வழக்குல முதல் பிரதிவாதி அவரு தானே?. டிபார்ட்மெண்ட்ல ஏதாவது சாதனை நடந்தா கிரெடிட் மட்டும் எடுத்துக்குவார்ல? தப்பு நடந்தா மட்டும் யாரு கீழ இருக்காங்களோ அவங்க பொறுப்பேத்துக்கணும்!."
அருகிலிருந்தவர் "தோழர்! உணர்ச்சிவசப்படாதீங்க!! உட்காருங்க" என்று கூறி அவரை சாந்தப்படுத்தி அமர வைத்தார்.
ஆறாவதாக ஒருவர் " ஏன் சார் நீதிபதி காரணமாக இருக்கக் கூடாது? ஏன் இன்னொரு வாய்ப்புக் கொடுத்து நிதானமாகத் தீர்ப்பு சொல்லியிருக்கக் கூடாது" என்றார்.
ஏழாவதாக ஒருவர் "வக்கீலும் கூடக் காரணம் தான். தனக்கு கேஸ் கெடைச்சாப் போதும். வேற யாரைப் பத்தியும் கவலையில்லை "
எட்டாவதாக ஒருவர் "சிஸ்டம் சரியில்ல சார், அது தான் எல்லாத்துக்கும் காரணம்.சிஸ்டத்தை மாத்துனா எல்லாம் சரியாகிடும் சார் " என்றார். வகுப்பில் சிரிப்பலை எழத் துவங்கியது.
ஒன்பதாக ஒருவர் விரிவாகப் பேசத்துவங்கினார். "சார் இவுங்க எல்லாம் திரும்பத் திரும்ப வேலையைப் பத்தியே பேசிக்கிட்டிருந்தாங்க. ஆனா வாழ்க்கை ரொம்பப் பெருசு சார்! அதுக்கு முன்னாடி சஸ்பென்சன், துறை நடவடிக்கை எல்லாம் ஒண்ணுமே இல்லை சார். வேலையே போனாக் கூட வேற வேலை தேடிக்கலாம். வேலையே இல்லைனாக் கூட வாழலாம். கோபாலன் எல்லாத்தையும் யாரிடமும் சொல்லாம மனசுக்குள்ளேய போட்டு வெச்சுக்கிட்டது தான் சார் அவரோட மன அழுத்தம், மாரடைப்பு எல்லாத்துக்கும் காரணம். மனைவியிடம் எல்லாத்தையும் பகிர்ந்திருக்கலாம். மன பாரம் குறைந்திருக்கும். மனைவி கிட்ட என்ன சார் மான அவமானம், கவுரவம் எல்லாம்? இல்லைனா, நண்பர்களிடமாவது பகிர்ந்திருக்கலாம். ஆபீஸ்ல பிரச்சினைன்னா வீடு ஆறுதல் கொடுக்கும். வீட்டுல பிரச்சினைன்னா ஆபீஸ் கண்டுக்காது. பிரச்சினைக்குத் தீர்வே இல்லைனு நினைச்ச அவரோட நம்பிக்கையின்மை ரெண்டாவது காரணம் "
அவர் பேசி முடித்தவுடன் வேதாச்சலம் அமைதியாக அவரிடம் "உங்களுடைய பெயர் என்ன? " என்றார். "தட்சிணாமூர்த்தி " என்று பதில் வந்தது.
வேதாச்சலம் அவரைப் பார்த்து மேலும் பேசினார்."ஆனா அவர் தட்சிணாமூர்த்தி இல்லையே, அவர் கோபாலன் மட்டுமே,உங்க அளவு அவருக்குத் தெளிவோ, தன்னம்பிக்கையோ இல்லையே! "
வகுப்பு முடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.
பிறகு அங்கிருந்தவர்கள் எல்லோருமே வேதாச்சலத்தைப் பார்த்துக் கேட்டனர். "சரியான பதில் என்ன சார்? யார் குற்றவாளி? "
வேதாச்சலம் புன்னகையுடன் அனைவரையும் பார்த்து விட்டு " வீட்டிற்குப் போய் நிதானமாக இரவு முழுவதும் யோசித்துப் பாருங்கள். உங்களுடைய மனசாட்சியிடமிருந்தோ,ஆழ்மனதிலிருந்தோ பதில் கிடைக்கலாம் " என்று கூறி வகுப்பை நிறைவு செய்து விட்டுச் சென்று விட்டார்.
வகுப்பு முடிந்த சில நிமிடங்களுக்குப் பிறகு அங்கிருந்த சரவணன் என்பவரும், அவரது நண்பரும் ஓய்வறையை நோக்கிச் சென்றனர். அப்போது ஓய்வறையிலிருந்து வேதாச்சலம் வெளியே வந்து கொண்டிருந்தார். அவரது முகம் தண்ணீரால் கழுவப்பட்டிருந்தது. கண்கள் சிவந்திருந்தன.
தர்மராஜன் முத்துசாமி